நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 2
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் பார்வையாளராகப் பங்கேற்று ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனைகளை வழங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் உடன் கலந்து கொண்டார். இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் 2022-23ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு அறிக்கை, மறு-கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நம்ம ஊரு சூப்பர் – சிறப்பு பிரசாரம், தனிநபர் சுகாதாரம், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் ஜல்ஜீவன் திட்டம் – வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி தீர்மானம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் – மகளிர் சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு நிர்வாகிகள் சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் வரவு-செலவு விவரங்கள்;, கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு¸ குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைஇ சாலை பாதுகாப்பு இரத்த சோகை குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உதவி எண்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட்டு, கிராம மக்களுக்கு அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்து கருத்தரியும் கூட்டமாக நடைபெற்று வருகிறது. குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தேசிய தினங்களில் கட்டாயமாக கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர அரசினால் அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறுவதற்கு சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகள் அவர்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை கிராமப் புறங்களின் வளர்ச்சியைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். கிராமப்புற வளர்ச்சி வலுவாக இருந்தால் அந்நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதனடிப்படையில் கிராம சபாக் கூட்டங்கள் வாயிலாக அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்தறிந்து அதனடிப்படையில் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது.
பொதுமக்கள் குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகிக்க வேண்டும். குடிநீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுத்திடும் வகையில் பயன்பாட்டில் இல்லாத போது குடிநீர் குழாயை மூடிவைத்திட வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், எதிர்வரும் பருவமழைக் காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் பொருட்டு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொதுக் கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும். ஏற்கனவே, நிறுவப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் அடைப்புகள் ஏதுமின்றி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு குக்கிராம அளவிலும் துண்டு பிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் மற்றும் ஊர்வலங்கள் போன்ற பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் மாதத்தினை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுவதை தொடர்ந்து ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான விவரங்கள் அனைத்து கிராமப்புற மக்களையும் சென்றடையும் வகையிலும் வளர் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் ஊட்டச்சத்து குறித்தும் மேலும் இது தொடர்பாக நடத்தப்படும் அனைத்து முகாம்களிலும் கிராமப்புற மக்களை பங்கு பெற செய்திடும் வகையில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள் , கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் ஊர் பெரியவர்களையும் பங்கு பெற செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆரோக்கிய பாத்திமா மேரி, பாலமுருகன், நரிமணம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி,அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

