நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 30
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்டம் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. அடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பொது இ-சேவை மையம் அல்லது தபால் நிலையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ஒருங்கிணைப்பு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கு கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 51 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்குபெற ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும், விவசாயிகளுக்கும் கலைஞர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து விவரிக்கப்பட்டும், விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தும் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 26.09.2022 வரை கலைஞர் திட்டத்தின் கீழ் வரும் கிராம ஊராட்சிகளில் 14 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை நாகப்பட்டினம் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், திருமருகல் வட்டாரத்தில் 11 கிராம ஊராட்சிகளிலும், கீழ்வேளுர் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும், கீழையூர் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், தலைஞாயிறு வட்டாரத்தில் 6 கிராம ஊராட்சிகளிலும், வேதாரண்யம் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும் ஆக மொத்தம் 51 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் பண்ணை கருவிகளான கடப்பாறை (1 எண்), இரும்பு சட்டி (1 எண்), களைக்கொத்தி (1 எண்), மண்வெட்டி (1 எண்) மற்றும் கதிர்அருவாள் (1 எண்) ஆகியன ரூ.3000 மதிப்பில் ஒரு தொகுப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு 90 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் அனுமதிக்கப்படும்.
இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் தானியங்களை சேமித்து பாதுகாப்பு செய்யும் பொருட்டு ரூ.4,956 மதிப்பில் 8ழூ6 மீட்டர் அளவிலான தார்ப்பாய் 50 சத மானியமாக ரூ.2,100 என்கிற விகிதத்தில் விநியோகம் செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயிர்களுக்குத் தேவையான உரம், தென்னைக் கன்றுகள், பயறுவிதைகள் மற்றும் பல இடுபொருட்கள் மானிய விலையிலும், விலையில்லாமலும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையையும் சேர்த்து 17 துறைகள் இதில் இணைந்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் இத்திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை மற்றும் மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு நபருக்கு ஒரு எக்டேருக்கு 400 மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் “உழவன் செயலி“ மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். வழங்கப்படும் மரக்கன்றுகளில் உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு கன்றுக்கு ரூ.7 வீதம் பராமரிப்பு மானியம் வழங்கப்படும்.
2022-23ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் 425 விவசாயிகள் 62,624 மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். இதில் 1 விவசாயிக்கு 200 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அகண்டராவ், கூட்டுறவு சங்ககளின் இணை பதிவாளர் கா.ப.அருளரசன்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர். சி.ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார். விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

