இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் முடங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின் குறிப்பிட்ட பதவி காலத்திற்குள் அவர்கள் பகுதியில் உள்ள கட்டமைப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளை முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க இரவு பகல் பாராமல் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர், மற்றும் உறுப்பினர்கள் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகள் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் அரசு அதிகாரிகள் சிலர் அரசியல் ரீதியாக கட்சி பாகுபாடு பார்ப்பதாலும், கரன்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவதாகவும் பல இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் 15-வது நிதிக்குழு 2021-2022க்கான பணிகள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 18 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முந்தைய அரசிற்கு நெருக்கமாகவும், தற்போது ஆளும் கட்சி அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் திட்ட மதிப்பீடு செய்யாமல் பஞ்சாயத்து தலைவர்கள் கேட்டால் அதற்கு அலட்சியமாக பதில் சொல்வதும் நடந்து வருகிறது.
இங்கு பணியாற்றி வரும் உதவி பொறியாளர்களிடம், ஏன் திட்ட மதிப்பீடு செய்யாமல் காலம் கடத்தி வருகிறீர்களே என பல்வேறு ஊராட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனராம். அதற்கு அதிகாரிகள் சிலர், நாங்கள் அரசு ஊழியர்கள் சங்கத்தில் மாநில பொறுப்பில் இருக்கிறோம். எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. நாங்கள் நினைத்த நேரத்தில் தான் திட்ட மதிப்பீடு பணிகளை செய்வோம் என்று அலட்சியமாக கூறிய வருகிறார்களாம்.
இதனால், திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்றங்களில் 15வது நிதி குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்ற படாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக அரசு ஓராண்டில் நூறாண்டு சாதனை செய்து வரும் இந்த கால கட்டத்தில் கிராம மக்கள் மத்தியில் தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கட்சி பாகுபாடு பார்த்து செயல்படும் திருவாடானை ஒன்றியத்தில் பணியாற்றும் அதிகாரியை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பகுதி மக்களின் வளர்ச்சிப்பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி பார்வையில் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் எந்தெந்த கிராம ஊராட்சிகளுக்கு பணிகள் நிறைவேற்றப்படாமல் முடங்கி கிடக்கிறது என்பதை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே அரசிற்கு ஏற்படும் அவப்பெயர் நீங்கும் என்கின்றனர் நேர்மையான அரசு அதிகாரிகள். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கை என்ன என்று திருவாடானை ஒன்றிய பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
செய்தி தொகுப்பு: சிறப்பு செய்தியாளர்.

