தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் உடன்குடி பவர் பிளாண்ட் அருகில் மானாடு, தண்டபத்து பகுதியில் அரசு நிலங்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய மணல் கொள்ளை நடந்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அவர் அளித்த மனுவில் தெரித்துள்ளதாவது: நான் மேலே கண்ட முகவரியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி சமூக பணிகளை செய்து வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம் பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் உடன்குடி பவர் பிளாண்ட் அருகில் மானாடு தண்டுபத்து கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பட்டா இடங்களிலும் கடந்த சில நாட்களாக ஒரு பெரிய மணல் மாபியா கும்பல், 20க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் இரவும் பகலும் கிராவல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.
அந்த கும்பல் கீழ திருச்செந்தூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/1, 91/2 & 96A/1 ஆகிய பட்டா இடங்களில் 3 அடி ஆழத்திற்கு சவுடி மணல் உள்ள அரசிடம் அனுமதி பெற்று, அந்த சீட்டினை வைத்துக் கொண்டு மேற்கண்ட மாநாடு தண்டுபத்து கிராமத்தில் 20 முதல் 25 அடி ஆழத்திற்;கு சவுடுமணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த தொழிலை மையமாக கொண்ட பகுதியாகும்.

அங்கு 25 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அடியோடு அழிக்கப்படுவதோடு, கால்நடைகளும், குழந்தைகளும் அதில் விழுந்து மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் உலக பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா வரும் நாட்களில் நடைபெற உள்ளதால் விழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்களும் மணல் அள்ளிய பள்ளங்களில் தேங்கும் மழைநீர் ஆழம் தெரியாமல் இறங்கி மூழ்கி இறக்கும் அபாயமும் உள்ளது.
மேற்படி மணல் கொள்ளை நாட்டிற்கே பெரிய அபாயம் என்றும், தற்போது அதனை தடுக்காவிட்டால் எதிர்கால சந்ததிகள் குடிக்க கூட தண்ணீர் இருக்காது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு எண்: W.P.(MD) No.20903/2016 (The Registrar (Judicial), Madurai Bench of Madras High Court – vs- State என்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளபடியும் மேலும் மாண்புமிகு உச்சநீதிமன்ற வழக்கானது Deepak Kumar and Others – vs – State of Haryana reported in (2012) 4 SCC page 629 – என்ற வழக்கின் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் முற்றிலும் சட்டவிரோதமாக, ஒரு சில அரசு அதிகாரிகளின் துணையோடு மேற்படி கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மேற்படி பகுதி கடலோர பகுதி என்றும் பாராமல் 20 முதல் 25 அடி ஆழத்திற்கு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் கடல்நீர் உட்புகும் அபாயமும் உள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் மணல் அள்ள மத்திய கடலோர பாதுகாப்பு அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு புறம்பாக கீழதிருச்செந்தூர் பகுதியில் சவுடு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே மேற்படி கீழ திருச்செந்தூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/1, 91/2 & 96A/1 ஆகிய பட்டா இடங்களில் கிராவல் மணல் அள்ள பெற்ற அனுமதியை தவறாக பயன்படுத்தி அருகில் உள்ள அனுமதி வழங்கப்படாத இடங்களில் சட்டவிரோதமாக சுமார் 25 அடி ஆழத்திற்கும் அதிகமாக கிராவல் மணல் அள்ளியும், மேலும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் 25 அடி ஆழத்திற்கு அதிகமாக கிராவல் மணல் அள்ளி வருகின்றனர். இதுகுறித்து நானும் மற்றும் கிராம மக்கள் வருவாய் அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. மாறாக அரசு அதிகாரிகளின் துணையோடு மேற்படி சட்டவிரோத செயல் நடைபெற்று வருகிறது.
வருவாய் அதிகாரிகள் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளநிலையில் இன்றுவரை மேற்படி இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டோ அல்லது விதிமுறைப்படி தான் மணல் அள்ளப்படுகிறதா என்பதை தெரிந்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றும், அனுமதியில்லாத இடங்களில் நாள்தோறும் கோடிக்கணக்கான மதிப்பில் கிராவல் மண் அள்ளப்படுவதை திருச்செந்தூர் வருவாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றும் தனது புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுகுறித்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தெரிவித்ததாவது: திருச்செந்தூர் பகுதிகளில் முறைகேடாக மணல் அள்ளுவது சம்பந்தமாக பல முறை திருச்செந்தூர் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தற்போது மாவட்ட எஸ்.பி மற்றும் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். காலகாமதம் ஆகும் பட்சத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களை நேரில் சந்தித்து ஆதாரங்களை காட்டி புகார் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

