நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்.
நாகப்பட்டினம் செப் 02
விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்கிட நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் 2021-2022 முதல் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022 – 2023 ஆண்டிற்கு 1,65,000 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஈட்டி, நாவல், வேங்கை, மகோகனி, மலைவேம்பு மற்றும் செம்மரம் உட்பட 25 வகை தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மற்றும் தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன.விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெறுவதற்காக வேளாண்மை – உழவர் நலத்துறையில் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவை கொண்டு பதிவு செய்த பின் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை இலவசமாக பெற்று பயன் பெறலாம்.
மரக்கன்றுகள் விநியோகம் “வரப்பு நடவு முறை” எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 2ம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21- வழங்கப்படும் மற்றும் நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி மூலமாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

