நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 26
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. அடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் 31.08.2022 க்குள் உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பொது இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இத்திட்டத்தில் பதிவு செய்த தகுதியான விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம். தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் திட்டத்தின் பயனாளிகள் விவரம் நில ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்ட பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே தகுதியான விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்இ தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆவணங்களை வழங்கி இணையதளத்தில் நில விவரங்களை விவசாயிகள் இணைத்துக் கொள்ள வேண்டும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை நாகப்பட்டினம் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும் திருமருகல் வட்டாரத்தில் 11 கிராம ஊராட்சிகளிலும் கீழ்வேளுர் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும் கீழையூர் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும் தலைஞாயிறு வட்டாரத்தில் 6 கிராம ஊராட்சிகளிலும் வேதாரண்யம் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும் ஆக மொத்தம் 51 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் பண்ணை கருவிகளான கடப்பாறை (1 எண்) இரும்பு சட்டி (1 எண்) களைக்கொத்தி (1 எண்) மண்வெட்டி (1 எண்) மற்றும் கதிர்அருவாள் (1 எண்) ஆகியன ரூ.3000 மதிப்பில் ஒரு தொகுப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு 90 சத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் அனுமதிக்கப்படும்.
இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் தானியங்களை சேமித்து பாதுகாப்பு செய்யும் பொருட்டு ரூ.4,95,600 மதிப்பில் 8 .6 மீட்டர் அளவிலான தார்ப்பாய் 50 சத மானியமாக ரூ.2,100 என்கிற விகிதத்தில் விநியோகம் செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயிர்களுக்குத் தேவையான உரம் தென்னைக் கன்றுகள் பயறுவிதைகள் மற்றும் பல இடுபொருட்கள் மானிய விலையிலும் விலையில்லாமலும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையையும் சேர்த்து 17 துறைகள் இதில் இணைந்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சத மானியத்தில் வேம்பு தேக்கு செம்மரம் மகாகனி ஈட்டி மரம் வேங்கை மற்றும் மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு நபருக்கு ஒரு எக்டேருக்கு 400 மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் “உழவன் செயலி“ மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். வழங்கப்படும் மரக்கன்றுகளில் உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு கன்றுக்கு ரூ.7 வீதம் பராமரிப்பு மானியம் வழங்கப்படும். தற்பொழுது வரை இத்திட்டத்தில் 1159 விவசாயிகள் 1,62,114 மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். இதில் 682 விவசாயிகளுக்கு 86,934 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அகண்டராவ் கூட்டுறவு சங்ககளின் இணை பதிவாளர் கா.ப.அருளரசன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர். சி.ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

