ஓட்டப்பிடாரம் அருகே கால்வாயில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் பாளை மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம் பகுதிகளை சேர்ந்த பெண்கள் விவசாய கூலி வேலைக்காக பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை இந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். அந்த வாகனத்தை மணக்காடு பகுதியை சேர்ந்த சித்திரை (55) என்பவர் ஓட்டி சென்றார். இன்று காலை மணியாச்சி காவல் நிலையம் அருகே உள்ள பாலத்தில் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து தலைகுப்புற அங்கு சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து. விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த மணியாச்சி டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் மணப்படை வீடு கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள் (30), சுடலை மனைவி ஈஸ்வரி (27), கணேசன் மனைவி மலைஅழகு (48), மனோகரன் மனைவி பேச்சியம்மாள் (54) மற்றும் வேலு மனைவி கோமதி (65) ஆகிய 5பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து மணியாச்சி இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலான போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்விபத்தில் காயம் அடைந்த திருமண கொழுந்துபுரம் சுப்பிரமணியன் மனைவி பேச்சியம்மாள் (65), சுந்தர தேவர் மனைவி செல்லத்தாய் (60), மாரியம்மாள் (50), மகாராஜன் மனைவி லிங்கம்மாள் (35), மகாராஜன் மனைவி பேச்சியம்மாள் (30) ஆகிய 5பேர் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்விபத்தில் காயம் அடைந்த மணிகண்டன் மனைவி விஜி (36) என்பவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மணியாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணியாச்சி டிஎஸ்பி சங்கர் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கோர விபத்து கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

