கோடியக்கரை வன சரணாலயத்தை ஒட்டிய கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லாத மர்ம படகு – காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை .
வேதாரணியம் ஜூலை 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடற்கரையில் காற்று நிரப்பி நீரில் செல்லும் 14 அடி நீளம் உள்ள படகு இன்று காலை ஆளில்லாமல் கரை ஒதுங்கியுள்ளது.
அந்தப் படகில் இரண்டு உயிர் கவச உடை , காற்றடிக்கும் பம்ப் ஒன்று, தண்ணீர் பாட்டில் 16 ஆகியவை இருந்தன. இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் , திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் ,கடலோரக் காவல்படையினர்,கடற்படையினர், வனச்சரகர் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து காட்டுப் பகுதி வரை சென்றது. இந்த ஆள் இல்லாத படகில் வந்தவர்கள் தீவிரவாதிகளா? கடத்தல்காரர்களா? அல்லது அகதிகளா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் இல்லாமல் கரை ஒதுங்கிய படகு இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

