தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு தொடர்ந்து பத்திரிகையாளர் நலன் காக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அளித்து சிறப்பான ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக முதலில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை துறையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இரண்டு கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது. அவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தும், இன்று வரை வீட்டுமனை பட்டா கிடைப்பெறாததால் வருகிற 17.2.2021 அன்று தூத்துக்குடிக்கு தேர்தல் பிரச்சாரமாக வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வரான தங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் 16.2.2021 அன்று 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் ஓய்வின்றி அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், அமைச்சர் பெருமக்களின் நிகழ்ச்சிகள் என தொடர்ந்து செய்தி சேகரித்து பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகை துறையினர் தங்களின் உரிமை மற்றும் சலுகையை போராடி தான் பெற வேண்டும் என்ற சூழல் தூத்துக்குடியில் உருவாகியிருப்பது வேதனையளிக்கிறது.
தூத்துக்குடிக்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தாங்கள், தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கும் விசயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, பத்திரிகையாளர்களின் நலனை காக்குமாறு, தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

