தொல்லியல் கழகம் 30 ஆம் ஆண்டு கருத்தரங்கம், ஆவணம் இதழ்கள் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டு வாழ்த்து.
புதுக்கோட்டை, ஜூலை 16: தமிழகம் முழுவதும் கல்வெட்டு, சிற்பம், பானை ஓடுகள், ஓலைச்சுவடிகள், உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சான்றுகளை ஆய்வு செய்து அறிவியல் பூர்வமாக பதிவு செய்து வெளியிடும் பணிகளை தொடர்ந்து தமிழக அளவிலும், இந்திய அளவிலும் உள்ள அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பலவேறு துறைகலைச் சேர்ந்த ஆர்வலர்கள் இணைந்து கண்டுபிடித்து, ஆவணப்படுத்தி வருகின்றனர். இவர்களது கண்டெடுப்புகள் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிய ஆய்வுக்கு பின் முறையாக ISBN அனுமதியோடு ஆவணம் ஆண்டு இதழாக வருடந்தோறும் வெளியிடப்பட்டு மக்கள், மாணவர்கள், இளம் ஆய்வாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இவ்வாண்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்றுள்ள பேராளர்களை கொண்டு இன்றும், நாளையும் சேர்த்து இரண்டு நாள் கருத்தரங்கம் உள்ளடங்கிய மாநாடாக தொல்லியல் கழகம் 30 ஆம் ஆண்டு மாநாடு புதுக்கோட்டை மாலையீட்டில் உள்ள கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் மாண்புமிகு சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி தலைமையில் இன்று தொடங்கியது.
இந்த தொல்லியல் கழக கருத்தரங்கில் 300 பக்கங்களில் 30, மற்றும் 31 வது ஆண்டு ஆவணம் ஆய்வு ஆண்டு இதழ் வெளியிடப்பட்டது.
தொடக்கவிழா:
இரண்டு நாள் மாநாடு மற்றும் ஆய்வு இதழ் வெளியீடு நிகழ்வுக்கான தொடக்க விழாவிற்கு ஆய்வறிஞர் சு.ராசவேலு வரவேற்று பேசினார்.
இம்மாநாட்டையொட்டி புதுக்கோட்டையில் தொன்மை அடையாளங்களை மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்ட தொல்லியல் சிறப்பு மலரை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டார், முதல் பிரதியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், முதன்மைக் அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, கீரை தமிழ்ராஜா ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்ட விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
பேரா.எ.சுப்புராயலு கருத்தரங்க நோக்கம் குறித்து உரையை வழங்கினார். பின்னர் இதுவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் துறையில் சிறப்பாக பணி செய்துள்ள அறிஞர்கள் கரு.ராஜேந்திரன், ஜே.ராஜா முஹமது ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பின்னர் விருதுபெற்ற இவர்கள் ஏற்புரை வழங்கினர்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மருத்துவர் எஸ்.இராமதாஸ் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும் உயிர்காக்கும் மாத்திரைகளை இலவசமாக வழங்கி பயன்படுத்தும் முறைகள் குறித்து பேசினார். இதில் இயற்கை விவசாய முன்னோடி ஜி.எஸ்.தனபதி, கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
நிறைவாக தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும், மாநாட்டு உள்ளூர் செயலாளருமான கல்வெட்டு ஆய்வாளர் ஆ.மணிகண்டன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

