ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து பரிதவிக்கிறது.
தமிழக அரசு உயர் நிபுணர் குழு நியமிக்க கான்ட்ராக்டர்ஸ் அசோசியேசன் வேண்டுகோள்.
தூத்துக்குடி,
ஜூன்.29:
தூத்துக்குடி ஷிப்பிங் ஏஜென்சி கணேஷ்குமார் மற்றும் தூத்துக்குடி கான்ட்ராக்டர்ஸ் அசோசியேசன் துணைத்தலைவர் பரமசிவன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு நாங்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இந்த தொழிற்சாலையை நம்பி சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த நிறுவனம் எப்படியாவது தன் மீதுள்ள பிரச்சனைகளை எல்லாம் சட்ட போராட்டங்கள் மூலமாக தீர்த்து திறக்கப்பட்டு விடும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்து வந்தோம். ஆனால், இந்த நிறுவனம் திடீரென தொழிற்சாலையை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நம்பியுள்ள அனைத்து தொழிலாளர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு விற்பனை முடிவை ஸ்டெர்லைட் நிறுவனம் மறுபரிசீலனை செய்திடவேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எந்தவிதமான மாசுபாடுகளும் இல்லை. இந்த நிறுவனத்தால் மாசு எதுவும் ஏற்படுகிறதா? என்பதை தமிழக அரசு உயர் நிபுணர் குழு ஒன்றை நியமித்து அதன்மூலமாக ஆய்வு செய்திடவேண்டும்.
தொழிற்சாலை இயக்கப்படும் காலத்தில் தொழிற்சாலையால் மாசுக்கள் எதுவும் ஏற்படுகிறதா? என்பதை இந்த திறன்வாய்ந்த நிபுணர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து அந்த குழு தரும் அறிக்கை அடிப்படையில் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிர்ணயம் செய்துள்ள அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி குறியீட்டு இலக்கை எட்டவேண்டுமெனில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்படுவது அவசியமாகும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால் தென்தமிழகம் மிகப்பெரும் பொருளாதார இழப்பினை சந்தித்துள்ளது. காப்பர் உற்பத்தியில் இந்த நிறுவனம் முதலிடத்தில் இருந்ததுடன் இங்கிருந்து உலக நாடுகளுக்கு காப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது உலக நாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்யும் துர்பாக்யநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்படுவதற்கு உரிய அனுமதி வழங்கிடவேண்டும். இந்த தொழிற்சாலை இயக்கப்படும் 6மாத காலத்தில் இதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை அரசு நியமிக்கும் நிபுணர்கள் குழு மூலமாக கண்டறிந்து அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடலாம்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சுமார் 25ஆயிரம் தொழிலளார்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்திடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்வளம் சிறந்திட ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த நிறுவனம் மூடப்பட்ட பிறகு வேலைவாய்ப்பு முற்றிலுமாக குறைந்து போய் விட்டது. அதோடு வருவாயும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த தொழிற்சாலையை நம்பி இருந்தவர்களின் வாழ்வாதாரமும் முடங்கி போய் விட்டது.
தென்தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டு விட்டதால், இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு தயங்கி வருகின்றன.
ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் செயல்படும் பட்சத்தில் காப்பர் ஏற்றுமதியில் நமது நாடு தன்னிறைவு பெறுவதுடன், இதுபோன்ற பெரிய பெரிய தொழிற்சாலைகள் தென்தமிழகத்திற்கு வரும் நிலை ஏற்படும். இதன்மூலமாக வேலைவாய்ப்புகள் பெருகிடும்.
எனவே இதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திடவேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனமும் தனது முடிவினை மறுபரிசீலனை செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
பேட்டியின்போது, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க தலைவர் தியாகராஜன், ஷிப்பிங் நிறுவனத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு:
எம்.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ் சேனல்
====================

