தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கல்வி மாவட்த்தை சேர்ந்த கீழ குத்தப்பாஞ்சான் ஊரில் அரசு உதவி பெறும் ஆர்.சி தொடக்கப் பள்ளி உள்ளது..
இந்த பள்ளியை சேர்ந்த சுமார் 75 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர், ஆலங்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்திருக்கும் வேளையில் பள்ளிக்கு செல்லாமல் அரசு அலுவலகம் நோக்கி மாணவர்கள் படையெடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
’’குத்தப்பாஞ்சான் ஆர்.சி. கல்வி நிர்வாகம் கிறிஸ்தவ மத போதனை செய்கிறது. அது குறித்து பல தடவை அதிகாரிகளுக்கு தெரிய படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேல் அந்த பள்ளிக்கு நாங்க போகமாட்டோம். இந்த பிரச்னையால் எங்கள் பகுதியில் இருந்து வெளியேறி சுமார் 165 மாணவர்கள் புதுப்பட்டி, ஆலங்குளம், மாதாபட்டினம், தாழையுத்து போன்ற ஊர்களில் உள்ள பள்ளியில் படிக்க போய்விட்டனர்.
எங்களுக்கு தனியாக அங்கே அரசு பள்ளி கட்டித்தர வேண்டும். இந்த கோரிக்கையை கடந்த 5 வருஷமாக சொல்லி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளுவதாக தெரியவில்லை. இன்று உறுதியான பதில் சொல்ல வில்லை என்றால் இங்கிருந்து போகமாட்டோம்’’ என்று மாணவர்கள் கூறினர்.
காலையில் ஆரம்பித்த முற்றுகை போராட்டம் மதியம் வரை நீடித்தது. மதியம் மாவட்ட கல்வி அதிகாரி வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றசாட்டு மற்றும் கோரிக்கை குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
இதனால் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கலைந்து சென்றனர்.

