நாகை ஜூன் 17:
நாகையில் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய போலீசார், லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நாகையில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சித்திரவேல் தலைமையில் போலீசார் கடந்த 15ம் தேதி மதியம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, எஸ்ஐ சேகர், ஏட்டுகள் தேவராஜ், சரோஜினி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் காவல் நிலையம் முழுவதும் சோதனை நடத்தி பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.75,630ஐ பறிமுதல் செய்தனர். மேலும் போலீசாரிடம் இந்த பணம் யாருடையது, ஏன் இங்கு இருக்கிறது, யாரிடமாவது லஞ்சமாக பெற்றதா என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று நாகை மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஆய்வாளர் ஆரோக்கிய டோனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளர் சேகர், தலைமைக்காவலர் சரோஜினி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவல்நிலையத்தில் கடந்த 15ம் தேதி ரூ.75,630 லஞ்சப்பணம் சிக்கியதை தொடர்ந்து 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை நாகை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் பல அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்


