நாகை அடுத்த திருக்குவளையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை முகாம்
நாகை ஜூன் 7
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 1431-ம் பசலி ஆண்டிற்கான இரயத்துவாரி இனாம், மைனர் இனாம் (அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டவை உட்பட) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்டம் முழுவதும் 07.06.2022 தொடங்கி 14.06.2022 வரை நடைபெறுகிறது.
அதனையொட்டி திருக்குவளை வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வருவாய்த் தீர்வாய அலுவலராக பங்கேற்று திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
7ம் தேதி திருக்குவளை வட்டம், வலிவலம் சரகத்திற்குட்பட்ட தென்மருதூர், ஆதமங்கலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, காருகுடி, வலிவலம், அணக்குடி, வடக்குபனையூர், தெற்குபனையூர் ஆகிய கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், வீட்டு மனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 173 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களின் மனுக்களை உடனடியாக பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையும், 6 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 2பயனாளிக்கு கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித் தொகையும், 5 பயனாளிக்கு, ஆதரவு அற்றோர் விதவை உதவித் தொகையும், பட்டா மாறுதல் 7 பயனாளிக்கும், பட்டா நகல் 40 பயனாளிக்கும் என மொத்தம் 67 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் (பொது) அன்சாரி, திருக்குவளை வட்டாட்சியர் ராஜ்குமார், அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய்மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

