கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் காணொலி காட்சி – சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் திட்டம் துவக்கி வைப்பு
நாகை மே 23
தமிழக முதலமைச்சர் அவர்களால் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் 23ம் தேதி துவக்கி வைத்ததையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிக்கல் ஊராட்சி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நாகை எம்பி செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட விவசாயிகள் நலன் சார்ந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” என்ற பெருந்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை, தமிழ்நாடு காதி மற்றும் கிராமத்தொழில் வாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 பஞ்சாயத்துக்களில் ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் 2021-22ம் ஆண்டிற்கு முதல்கட்டமாக 29 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களான கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுதல், சமுதாய காடுகள் உருவாக்குதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தி பெருக்குதல், கூட்டுறவு சங்கம் மூலம் பயிர் கடன் வழங்குதல், வருவாய்த்துறை மூலம் நிலப்பட்டா மாறுதல் வழங்குதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
வேளாண்மை துறை மூலம் கிராம ஊராட்சிகளில் தலா ஒரு குடும்பத்திற்கு 3 நெட்டை தென்னைகன்றுகள்; 200 குடும்பங்களுக்கு 100 சதவீதம் மானிய விலையிலும், வரப்பு பயிர் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு 5 கிலோ வீதம் உளுந்து விதைகள் 75 சதவீத மானிய விலையிலும், கை மற்றும் விசை தெளிப்பான்கள் ரூ.750 மற்றும் ரூ3000 மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.இத்துறையின் மூலம்; அனைத்து திட்டங்களும் 80 சதவீத கிராம ஊராட்சிக்கு செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலை துறை மூலம் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க காய்கறி விதை கிட் 75 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட உள்ளது. வரப்பு ஓரங்களில் 8 விதமான பழ மரங்கள் மற்றும் இதர மரக்கன்றுகள்; 100 சதவீத மானிய விலையிலும், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த ஒரு ஹெக்டெருக்கு 5000 மதிப்பீட்டில் 2 ஹெக்டெருக்கு இயற்கை இடுபொருட்கள் மானிய விலையிலும், நெகிழி கூடைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு செய்ய ஏதுவாக 200லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம் கொண்ட தொகுப்பு 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை அரசு அலுவலர்கள் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு விவசாயிகளும்இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு திட்டமும் தகுதியான மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த விழாவில் வேளாண்மை பொறியியல்துறை சார்பில் கலையெடுக்கும் கருவி ஒரு நபருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான், உளுந்து போன்றவைகளும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறி விதைகள் கிட், மரக்கன்று, உரம், பேரல் போன்ற நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அங்கு தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைதுறை, பொறியில்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும், அங்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி தடுப்பூசி போடும் முகாமினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .ஜாக்குலா அக்கண்டராவ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திவ்யா, வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்கலா, வேளாண்மை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

