தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலில் 23 வருடங்களுக்குப்பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – நெகிழ்ச்சி சம்பவம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாகப் படித்த குலையன்கரிசல் றி.டி.றி.ஏ.அபிஷேகநாதர் உயர் நிலை பள்ளி மாணவர்களின் சந்திப்பு நேற்று (22.05.2022) அப்பள்ளியில் நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளமற்ற சிரிப்புடன் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தபடி எதிர்காலச் சிந்தனை ஏதுமின்றி துள்ளிப் பறந்த பள்ளிப் பருவத்தின் நினைவுகளை அத்தனை எளிதில் யாராலும் கடந்து விட முடியாது. அதனால் கால ஓட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றியபோதிலும் பழைய மாணவர்களின் சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் றி.டி.றி.ஏ.அபிஷேகநாதர் உயர் நிலை பள்ளியில் 1998-99-ம் வருடம் 12ம் வகுப்புப் படித்து முடித்த பழைய மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 19 பேர் கலந்துகொண்டனர்.
குலையன்கரிசல் றி.டி.றி.ஏ.அபிஷேகநாதர் உயர் நிலை பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அபிஷேகநாதர் ஆலய குருவானவர் தலைமை தாங்கினார். மேலும், பள்ளி தாளாளர் மற்றும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் இப்பள்ளியில் படித்து உயர்ந்த நிலையை எட்டிய பலரும் தங்களுடைய பழைய நினைவுகள் குறித்து பரவசத்துடன் பேசி மகிழ்ந்தனர். அந்த காலத்தில் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்தும், அதில் கிடைக்கும் குறைவான மதிப்பெண்கள் பற்றியும் சுவாரஸ்யமாக நினைவு கூர்ந்தனர்.
தாங்கள் அமர்ந்து படித்த வகுப்பறைகள், ஓடித் திரிந்த பள்ளி வளாகப் பகுதிகள், விளையாட்டு மைதானம் என ஒவ்வொரு இடத்துக்கும் சென்ற பழைய மாணவர்கள், மலரும் நினைவுகள் கண்களில் தெரியப் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். பலரும் பழைய நண்பர்களைக் கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்தும், அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டியும் பேசினர்.
பள்ளி வளாகத்தைச் சுற்றி வந்த பழைய மாணவர்களின் கண்களில், தாங்கள் படித்த பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டதால், சுவர்களில் கீறல் விழுந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதனால் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தங்களுடைய பங்களிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை மாணவர்களே வசூலித்து, அதை பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் வழங்கினார்கள்.
பின்னர், பழைய மாணவர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டனர்.
பள்ளிக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்யக் காத்திருப்பதாகவும் பழைய மாணவர்கள் உறுதியளித்தார்கள். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு தங்களை 23 வருடங்களுக்கு முன்னோக்கி அழைத்துச் சென்றதாக இதில் பங்கேற்ற பலரும் மகிழ்வுடன் பேசியபடி கலைந்து சென்றார்கள்.

