நாகை மாவட்டம் பிராந்தியங்கரையில் மக்கள் நேர்காணல் முகாம்
நாகை மே 12
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரை சமுதாய கூடத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.
இம்மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

இம்மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
நம் மாவட்டத்தில் மாதம் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.
தமிழக அரசானது பல திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. அரசு அறிவிக்கும் திட்ட உதவிகளை பெற அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உள்ள மக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே இந்த மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற அரசின் திட்டங்கள் மற்றும் நல உதவிகளை அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் இம்முகாம் அமையும்.
முக்கியமாக குடிநீர் அனைவருக்கும் கிடைக்க இந்த ஆண்டு சுமார் ரூ.2100 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தண்ணீர் பிரச்சனையை 2054ஆம் ஆண்டு வரையிலும் இருக்ககூடாது என்பதற்காக ஒரு திட்டம் வகுத்து, அத்திட்டத்திற்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும். கூடிய விரைவில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய 2 கூட்டு குடிநீர் திட்டம் செய்யப்போகிறோம். 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவுற்ற பிறகு வீட்டுக்கு வீடு குடிதண்ணீர் வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எடுத்து வருகிறது. வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம். ஓரிரு காலங்களிலேயே கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இத்திட்டத்திற்காக நாம் அனைவரும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.
மேலும், இன்றைய தினத்தில் அகஸ்தியன்பள்ளியில் உப்பளத்தில் இருக்கிறோம் என தெரிவித்தவர்களில் 30 நபர்களுக்கு இன்று இம்முகாமில் பட்டா வழங்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து புஷ்பவனத்தில் சுனாமி குடியிருப்பில் 35 நபர்களுக்கு பட்டாவினையும் வழங்கியிருக்கிறோம். தமிழ்நாடு அரசு முனைப்புடன் விழிம்பு நிலை மக்களான நரிகுறவர், இருளர் மக்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அதில் நரிகுறவர் 16 நபர்களுக்கு பட்டாவினை இம்முகாமில் வழங்கப்பட உள்ளது.
மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நம் அரசு செயல்படுத்தி வருகிறது. சரியான நபர்களுக்கு சரியான திட்டம் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றி பெற்றது என அர்த்தம். மேலும், உண்மையான கஷ்டத்தில் இருக்க கூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்.
2022 பிப்ரவரி வரை யாரெல்லாம் குடிசையில் இருக்கிறார்களோ, 30 வருடத்திற்கு மேலாக உள்ள வீடு இடிந்திருந்த நிலையில் உள்ளவர்களுக்கும் புதிதாக தமிழ்நாடு அரசு வீடு வழங்க உள்ளது. கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட உள்ளது. அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அந்தந்த ஊரில் உள்ள தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டால் சரியான நபர்களுக்கு இத்திட்டம் சென்றடையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இம்முகாமில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.7,900 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலி மற்றும் அடையாள அட்டையினையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 61 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 என 12 மாதத்திற்கு ரூ.7,32,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வருவாய் துறை சார்பில் 113 பயனாளிகளுக்கு ரூ.12,58,350 மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.65,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரத்தினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1,45,860 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரத்தினையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.5,70,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத் தொகைக்கான ஆணையிணையும், கலப்பு திருமணம்-திருமணநிதியுதவி சேமிப்பு பத்திரத்தினையும், நத்தம் பட்டாமாற்றம் 11 பயனாளிகளுக்கும், மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 25 பட்டாநகலும், 30 பயனாளிகளுக்கு புதிய குடும்பஅட்டை மற்றும் நகல் குடும்ப அட்டையினையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தளையினையும், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.19,804 மதிப்பீட்டில் தென்னங்கன்று, வேளாண் பண்ணைக் கருவிகள், கோனோவீடர், தென்னை மரம் ஏறும் கருவியினையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தாது உப்புக்கலவை போன்ற நலத்திட்ட உதவிகள் எனமொத்தம் 321 பயனாளிகளுக்கு சுமார் ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 914 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன், பிராந்தியங்கரை ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி, வட்டாட்சியர் இரவிச்சந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

