சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக காவல் நிலையம், மற்றும் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் 10 பேர்கள் திடீரென வந்து மீண்டும் விசாரனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பொது முடக்கத்தை மீறி கடை நடத்தியதாக வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்து சென்று தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி கொலை வழக்காக மாற்றி அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட போலீஸார் 10பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில தாக்கல் செய்து விட்டனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் பேய்க்குளம் ராஜசிங் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து இரு காரில் சிபிஐ அதிகாரிகள் 10 பேர்கள் சாத்தான்குளம் வந்தனர். அதில் 5பேர் சாத்தான்குளம் காவல் நிலையத்திலும், 5பேர் அரசு மருத்துவமனைக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .
அதேபோல் அரசு மருத்துவமனையிலும் அங்கு பணிபுரிந்த செவிலியர்கள், மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அரசு மருத்துவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் மருத்துவரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது இருந்த ஆவணங்களையும் சிபிஐ தங்கள் கையில் வைத்துள்ள ஆவணங்களையும் சரிபார்த்தனர். இந்த விசாரணை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.

