2 ஆண்டுகளுக்குப் பின்னர்
ஊட்டி மலர் கண்காட்சி மே 20 ல் துவக்கம்..
ஊட்டி, மே 28
ஊட்டியில், 124வது மலர் கண்காட்சி மே 20 முதல் 24 வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது.நீலகிரி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக கோடைவிழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான கோடை சீசனை சிறப்பாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் கோடை விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநில தோட்டக்கலை இயக்குனர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மே மாதம் கோடை விழா நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, மே 7, 8ம் தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி; 13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடலுாரில் வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது. மே, 14, 15, தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே 20ல் துவங்கி, 24 வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. மே, 28, 29 ஆகிய தேதிகளில் குன்னுாரில் பழ கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

