தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது : மேயர் ஆகிறார் ஜெகன் பெரியசாமி!
தூத்துக்குடி மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 20வது வார்டில் போட்டியிட்ட ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மேயர் ஆகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 554 தபால் வாக்குகள் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் பிரிக்கப்பட்ட எண்ணும் பணிகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் திமுக 47 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது. அதிமுக 11 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். மேலும் 20வது வார்டில் போட்டியிட்ட ஜெகன் பெரியசாமி 400க்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுவது உறுதியாகிறது. ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மேயராக தேர்வு செய்யப்பட உள்ளார். இவரது தந்தை என்.பெரியசாமி தூத்தக்குடி நகர சபை தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சகோதரி சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆவார்
திமுக பெருவாரியான வார்டுகளை கைப்பற்றி உள்ளதால் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

