வாக்குசாவடி மையங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு
வேதாரண்யம் பிப் 14
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள சாதாரண தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சிமற்றும் பேரூராட்சிகளின் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலை முன்னிட்டு திட்டச்சேரி பேருராட்சி மற்றும் கீழ்வேளுர் பேருராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை ஆய்வு செய்தார்.
திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழ்வேளுர் அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் வாக்குபதிவிற்கு தேவையான பொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், திட்டச்சேரி உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடி கல்வி பயிற்சி வகுப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை பார்வையிட்டு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையால் பாதிக்காத வண்ணம் தார்பாய் கொண்டு பாதுகாக்கப்படுவதையும், நெல் மூட்டைகள் உரிய இடத்திற்கு இயக்கம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட நியாயவிலை கடை மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகுடி, பெருங்கடம்பனூர், தேமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள், பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.


இவ்வாய்வின்போது காவல்துறை துணைகண்காணிப்பாளர் கௌதமன்(பயிற்சி), கீழ்வேளுர் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், திட்டச்சேரி பேரூராட்சிசெயல் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

