வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் திருதேர் வடம்பிடித்து இழுத்தனர்.
வேதாரண்யம், பிப்.13-
மிகவும் பிரசித்தி பெற்ற வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசி மகத் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று திருதேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். திருத்தேரோட்டத்தை முன்னாள் அமைச்சரும், வேதாரணியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தேரோட்டத்தை வடம்பிடித்து துவக்கி வைத்தார்.கோவில் நிர்வாக அலுவலர் U.ஜெயசந்திரன்,
காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல், அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன்,
வழக்கறிஞர்கள் நமச்சிவாயம்,
கிரிதரன் மற்றும் ஏராளமான
பொதுமக்கள்
கலந்துகொண்டு திருத்தேர்
வடம் பிடித்து
இழுத்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்த ஸ்தலம். இங்கு வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக ஐதீகம். இங்கு தெற்கு முகமாக துர்க்கையம்மன் திரிபங்கி வடிவில் சாந்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராமபிரான் இலங்கை சென்று போரிட்டு திரும்பி வந்த போது அவருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை இங்குள்ள விநாயகர் நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இங்கு உள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கும் அம்மனின் குரல் இனிமையா, சரஸ்வதியின் வீணையிலிருந்து வரும் இசை இனிமையா என போட்டி ஏற்பட்டது. அதில் வீணையின் இசையை விட அம்மனின் குரல் இனிமையாக இருந்தது. இதனால் இங்குள்ள சரஸ்வதி வீணையில்லாமல் உள்ளார். மேலும் இங்குள்ள நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே திசையில் சிவபெருமானை வணங்கியப்படி உள்ளது ஒர் சிறப்பு அம்சமாகும். இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் காசியில் நீராடி கிடைக்கும் பலனை விட ஒரு மடங்கு அதிக பலன் கிடைக்கும். இப்படி புராண மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 29.01.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிமக பெருவிழாவில் திருக்கதவு திறக்கும் நிகழ்ச்சி, 10 தொகையடியார்கள் உட்பட 73 நாயன்மார்கள் வீதியுலா என பல்வேறு சிறப்பு திருவிழாக்கள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய தியாகராஜ சுவாமி திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து நான்கு பிரதான வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தியாகேசா…, மறைகாடா.. என பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மாசிமக தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேதாரண்யேஸ்வரரை சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்.

