சென்னை பெருநகரில் உள்ள 8 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்து சென்னை பெருநகர காவல் ஆணையாளரை சந்தித்தனர்.
சென்னை பெருநகரில், பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இளஞ்சிறார் மற்றும் சிறுமியர் தொடர்ந்து கல்வி பயிலவும், திறமையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு தகுந்த பயிற்சி மற்றும் ஊக்கமளித்து, கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கவும், பிற சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் தகுந்த வழிகாட்டுதலோடு சிறந்து விளங்க கடந்த 2003ம் ஆண்டு சென்னை பெருநகரில் உள்ள காவல் நிலைய எல்லைகளில் காவல் சிறார் மன்றங்கள் (Police Boys Club) துவக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 79 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் (Police Boys & Girls Club) செயல்பட்டு வந்த நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கூடுதலாக 38 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் தொடங்கப்பட்டு தற்போது 117 காவல் சிறார் மன்றங்கள் இயங்கிவருகிறது.
மேற்படி காவல் சிறார் மன்றங்கள் அமைந்துள்ள எல்லையிலுள்ள சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் பராமரிப்பில், தகுந்த பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, காவல் சிறார் மன்றங்களில் பயிலும் சிறார் மற்றும் சிறுமியர்களுக்கு தகுந்த கல்வி, விளையாட்டு திறன் மேம்பட உரிய வசதிகளை ஏற்படுத்தி தந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 24 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை HCL தனியார் நிறுவனத்தினர் சென்னை பெருநகர காவல் துறையினருடன் இணைந்து பராமரித்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக,
I. Saint-Gobain Limited நிறுவனத்தினர் F-1 சிந்தாதிரிப்பேட்டை, R-5 விருகம்பாக்கம், R-10 எம்.ஜி.ஆர் நகர் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் உள்ள 3 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களையும்,
II. Bhoomika Trust நிறுவனத்தினர் மைலாப்பூர், ஐஸ்அவுஸ், அபிராமபுரம் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் உள்ள 4 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களையும்,
Bala Mandir Kamaraj Trust நிர்வாகிகள் தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள 1 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் என மொத்தம் 8 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை, மேற்படி நிறுவனத்தினர் சென்னை பெருகர காவல் துறையினருடன் இணைந்து பராமரிக்க முன்வந்தனர்.
அதன்படி இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி 3 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப கலந்தாலோசனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் முனைவர் லோகநாதன், இ.கா.ப, மேற்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேஸ்வரி, இ.கா.ப மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

