கோடியக்கரை வனத் துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளரின் பணியை பாராட்டி 10,000 ரூபாய் வழங்கிய நாகை மாவட்ட ஆட்சியர்.
வேதாரணியம்
பிப் 08
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனத்துறையில் கடல் ஆமை முட்டை பொரிப்பக மையம் உள்ளது. இதில் கடலோரத்தில் கடல் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாத்து பின்னர் குஞ்சு வெளிவந்தவுடன் அதை கடலில் விடுவது வழக்கம். கடலோரத்தில் கடல் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரிக்க வனத்துறைப் பணியாளர்களைத் தவிர தற்காலிக பணியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியைச் செய்யும் 70 வயது முதியவர் நடேசன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோடியக்கரை கடல் ஆமை முட்டை பொரிப்பகத்திற்கு வருகை தந்து ஆய்வுசெய்த நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் , ஆமை முட்டை பொரிப்பகத்தில் சேகரிக்கப்படும் முட்டைகள் , அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் இவற்றை விரிவாக கூறிய நடேசனின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு இன்று (8.2.2022 ) நாகை மாவட்ட ஆட்சியரகத்திற்கு வரச்செய்து அவருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார்.
இது குறித்து நடேசன் கூறும்போது மாவட்ட ஆட்சியர் பாராட்டி பரிசளித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதற்கு காரணமாக இருந்த வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா அவர்களுக்கும், வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனவர் சதீஷ் உள்ளிட்ட வனத்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

