தூத்துக்குடி மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பரிசுகள் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மனித நேய வார விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, இசைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் கரிசல்குளம் ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: ஆண்டுதோறும் ஜனவரி 24 முதல் 30ம் தேதி வரை மனிதநேய வார விழாவாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கொண்டாடப்படுகிறது. மனிதநேயம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனிதநேயத்துடன் கல்வியை சிறப்பாக கற்க வேண்டும். கல்வியின் மூலம் தான் வாழ்க்கையில் மேம்பாடு அடைய முடியும். நீங்கள் அனைவரும் நன்றாக படித்து உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும். கல்வியியுடன் பல்வேறு போட்டிகள் மற்றும் விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதை கண்டறிந்து அவர்களின் ஆர்வத்தை கண்காணித்து அதில் தேர்ந்து வருமாறு செய்தல் வேண்டும். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கும், இசை நிகழ்ச்சிகள் நடத்திய இசைப்பள்ளி, மாணவ, மாணவிகளுக்கும், இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பழனிகுமார், கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரகுமார், திருமங்கலக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜன், தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அழகர் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
