தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் சூடு பிடித்தது
அதிமுக – திமுக மாவட்ட செயலாளர் இடையே நேரடி போட்டி
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் பாஜக கூட்டணி இடம் பெறும் என்றும், வழக்கம் போல் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. காரணம் கடந்த எம்பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு ஒதுக்கியது. அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான தமாக-வுக்கு ஒதுக்கீடு செய்தது. அந்த அடிப்படையில் கூட்டணி கட்சிக்கு தூத்துக்குடி ஒதுக்கப்படும் என அதிமுக சார்பில் பேச்சு அடிப்பட்டது. பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக நேரடியாக களம் காணுகிறது. முந்தைய தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியதால் அதிமுகவினர் தேர்தல் களத்தில் சோர்வடைந்திருந்தனர்.
தற்போது அதிமுகவே தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா தூத்துக்குடி 59வது வார்டில் களமிறக்கப்பட்டுள்ளார். இவரே தூத்துக்குடி மேயர் வேட்பாளர் எனவும் அதிமுகவினர் மத்தியில் பேசப்படுகிறது.

அதுபோல் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவனின் உடன்பிறந்த சகோதரர் என்.பி.ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டு பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் இவரே மேயர் வேட்பாளர் என அறிவிக்க கூடும் என திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
திமுக-அதிமுக மாவட்டச் செயலாளர்களின் குடும்பத்தினர் நேரடியாக தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் ஆரம்பமே சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
அதிமுக மாவட்டச்செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா வழக்கறிஞர் ஆவார். இவர் அதிமுக தகவல் தொழிற்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார்.
திமுக சார்பில் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார். இவர் தனது தந்தை மறைந்த என்.பெரியசாமியிடம் ; அரசியல் பாடம் கற்றவர். மேலும், அவரது அக்கா அமைச்சர் கீதாஜீவனிடம் இணைந்து அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக-திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதே சமயத்தில் மேயர் வேட்பாளராக திமுகவின் என்.பி.ஜெகன் மற்றும் அதிமுகவில் எஸ்.பி.எஸ்.ராஜா மேயர் வேட்பாளராக ஜொலிக்கிறார்கள். இதனால் 60 வார்டுகளிலும் தேர்தல் களை கட்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அதிமுக – திமுக நேரடி போட்டியால் ரத்தத்தின் ரத்தமும், உடன்பிறப்புக்களும் கடும் உற்சாகத்தில் உள்ளனர். சபாஷ் சரியான போட்டி.

