தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு விருது. ஆய்வாளர் பிச்சையா மற்றும் போலீசாரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் வாழ்த்தினார்
—————————
திருப்பூர் ஜனவரி 31
தமிழகத்தின் சிறந்த காவல் நிலைய விருதினை திருப்பூர் தெற்கு காவல் நிலையம் பெற்ற நிலையில் அதன் ஆய்வாளர் பிச்சையா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு காவலர்களால் அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வரிடம் விருதை பெற்ற ஆய்வாளருக்கு காவல் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரால் கேடயமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டில் தமிழகத்திலேயே சட்டம் ஒழுங்கு, குற்ற வழக்குகள், களவு சொத்துக்கள் மீட்பு என 95 சதவிகிதம் வழக்குகளை முடித்து தமிழகத்தின் தலை சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்தது.
ஜனவரி 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையாவுக்கு முதல் பரிசுக்கான கோப்பையை வழங்கி சிறப்பித்தார். கோப்பையை பெற்று திருப்பூருக்கு வருகை தந்த காவல் ஆய்வாளருக்கு சக காவலர்கள் மலர் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு செய்தனர்.
கமிஷனரிடம் வாழ்த்து:
தமிழகத்தில் தலை சிறந்த காவல் நிலையமாக தெற்கு காவல் நிலையம் வெற்றி பெற்று அதற்கான கோப்பையை பெற்ற ஆய்வாளர் பிச்சையா விருதுடன் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் வாழ்த்து பெற்றார்.இந்த சந்திப்பின்போது துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு
ப.மணிகண்ட மூர்த்தி
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

