குடியரசு நாளையொட்டி டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியேற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை அணிவகுப்பு நடைபெற்றது.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் கொடியேற்றுவதற்காக டெல்லி ராஜபாதையில் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மேடைக்குச் சென்ற ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். டெல்லி ராஜபாதை முழுவதும் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டன.
குடியரசு நாள் விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படைகளும் தங்களது கம்பீரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
கரோனா பரவல் காரணமாக குடியரசு நாள் விழாவில் வெளிநாட்டு விருந்தினர் பங்கேற்கவில்லை. விழாவில் பங்கேற்றவர்களும் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொப்பி அணிந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றார். ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

