விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
—
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(24.01.2022) விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
பொது சுகாதாரத்துறையின் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கமாகும்.
அதன்படி, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் தங்களது வட்டாரத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத் தொடரின் மூலம், வட்டார அளவில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய மருத்துவ தேவைகள் கிடைக்கப்பெற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அறிக்கை மாநில பேரவைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில்; திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திருமதி.திலகவதி, இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.மனோகரன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சங்குமணி, துணை இயக்குநர்கள்(சுகாதாரப்பணிகள்) மரு.பழனிச்சாமி(விருதுநகர்), மரு.கலுசிவலிங்கம்(சிவகாசி) உட்பட வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: எம்.மாரிமுத்து (செய்தியாளர்)
பாக்கியராஜ் (புகைப்படம்)

