எட்டயபுரம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையில் இருந்து வந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்திற்கு குடும்பத்தினருடன் வந்து குடியேறினார். முருகன் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மூத்த மகள் சக்தி பாரதி, அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்தை முருகன் ஏற்கவில்லை. மகள் திருமணத்தால் முருகன் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று சக்திபாரதிக்கு கணவர் வீட்டார், அங்குள்ள ஒரு மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த மண்டபத்தின் அருகே உள்ள தொழுவத்தில் முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நேற்று நடைபெற இருந்த வளைகாப்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

