சாமிதோப்பு அய்யா
வைகுண்டசாமி தலைமைப்பதியில்
தை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம்
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது . இங்கு வருடம்தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா நேற்று 14-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு பணிவிடையும், பதியை சுற்றி ஊர்வலமும் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு குரு வக்கீல் பாலஜனாதிபதி தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்றத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதிலுமிருந்து அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி தொட்டில் வாகனத்தில் தெருவீதி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் வக்கீல் யுகேந்த், டாக்டர் வைகுந்த், நேம்ரிஸ் ஆகியோர் செய்தனர். விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவின் இரண்டாம் நாள் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு அய்யா மயில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மூன்றாம் திருவிழாவில் இரவு அய்யா வெள்ளை சாற்றி அன்ன வாகனத்தில் பவனி வருதலும், நான்காம் திருவிழாவில் இரவு வைகுண்டசுவாமி கருட வாகனத்தில் பவனி வருதலும், ஐந்தாம் திருவிழாவில் இரவு அய்யா வைகுண்டசுவாமி பச்சை சாற்றி துளசி சப்பர வாகனத்தில் பவனி வருதலும், ஆறாம் திருவிழாவில் இரவு சர்ப்ப வாகன பவனியும், 7-ம் திருவிழாவில் இரவு கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வருகின்ற 21-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திரு விழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகின்ற 17-ம் தேதி திங்கள்கிழமை 11-ம் திருநாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சிபடிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. திருவிழா அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என தலைமை பதி குரு பாலஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்..


