நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வேதாரண்யம் டிச 24
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் உடன் இருந்தனர்.
2021-22 ஆம் ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்திட 1,57,000 ஏக்கர் இலக்கு பெறப்பட்டு இது நாள் வரை நேரடி விதைப்பாக 1,06,948 ஏக்கரும், நடவு பயிராக 55,495 ஏக்கரும் மொத்தம் 1,62,443 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கீழ்வேளுர் வட்டாரத்தில் 5,980 கிலோவும், வேதாரண்யம் வட்டாரத்தில் 3,030 கிலோவும், திருமருகல் வட்டாரத்தில் 9,010 கிலோவும், உளுந்து விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் 50 சத மானியத்தில் பெற்று பயன்பெறலாம். மேலும் எதிர்வரும் பருவத்திற்கு தேவையான உளுந்து, பச்சைபயிறு, எள் மற்றும் நிலக்கடலை போன்றவை அனைத்து வேளாண் விரிவாக்க மையத்திலும் இம்மாத இறுதிக்குள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கு நெல் மற்றும் பயறுவகை பயிர்கள் 91,300 ஹெக்டேர் (2,28,250 ஏக்கர்) பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளவும், இதன் மூலம் 2.40 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்திடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் டிசம்பர்;; 2021 மாதம் வரை 78,097 ஹெக்டேர் (1,95,243 ஏக்கர்) பரப்பு சாகுபடி செய்யப்பட்டு 0.52 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியில் சாதனை எட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது யூரியா 902 மெ.டன், டி.ஏ.பி 229 மெ.டன், பொட்டாஷ் 233 மெ.டன், காம்ப்ளக்ஸ் 743 மெ.டன் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் பொட்டாஷ் உரத்தின் விலை உயர்வு காரணமாக அனைத்து உரக்கடைகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வோளாண்மை வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைக்கப்பட்டு அத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் தரிசு நிலங்களை கண்டறியும் பணி முடிக்கபட்டுள்ளது. தற்சமயம் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான முழு அளவிலான அரசாணை எதிர்நோக்கும் நிலையில் இத்திட்டம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் பண்ணை கருவிகளான கடப்பாறை (1 எண்), இரும்பு சட்டி (1 எண்), களைக்கொத்தி (1 எண்), மண்வெட்டி (1 எண்) மற்றும் கதிர் அரிவாள் (1 எண்) ஆகியன ரூ.3,000 மதிப்பில் ஒரு தொகுப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதில் விவசாயிகளுக்கு 90 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் அனுமதிக்கப்படும். இத்திட்டத்தில்; தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் தானியங்களை சேமித்து பாதுகாப்பு செய்யும் பொருட்டு ரூ.4,956 மதிப்பில் 8.6 மீட்டர் அளவிலான தார்ப்பாய் 50 சத மானியமாக ரூ.2,100 என்கிற விகிதத்தில் விநியோகம் செய்யப்படும். மேற்படி பண்ணை கருவிகள் மற்றும் தார்ப்பாய்கள் முன்னுரிமை மற்றும் முன்பதிவு
அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.
விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்
இத்திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை மற்றும் மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். வழங்கப்படும் மரக்கன்றுகளில் உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கன்றுக்கு ரூ. 7 வீதம் பராமரிப்பு மானியம் வழங்கப்படும். நுண்ணீர் பாசனத் திட்டம்: 2021-22 ஆம் நிதியாண்டில் தென்னை பயிர்களில் சொட்டுநீர் பாசனமும், இதர பயிர்களில் தெளிப்பு நீர் பாசனமும் மேற்கொள்ள 600 ஹெக்டேர் பொருள் இலக்கு பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி தேவைப்படும் ஆவணங்களை வழங்கி தங்களது பெயரை முன்கூட்டியே பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. கிஸான் கடன் அட்டைவழங்கும் திட்டம் (முஊஊ): இத்திட்டத்தில் விவசாயிகள் ரூ.1.60 இலட்சம் வரை பிணையமின்றி கடன் பெறலாம். ரூ.1.60 முதல் 3.00 இலட்சம் வரை பிணையத்துடன் கடன் பெறலாம். விவசாயிகள் கால்நடை பராமரிப்பாக ரூ.3.00 இலட்சம் மற்றும் மீன்வள பராமரிப்பாக ரூ.2.00 இலட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம். உரிய காலத்திற்குள் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3மூ வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த கடன் அட்டை 5 வருடங்கள் வரை செல்லத்தக்கதாகும். உழவன் கைப்பேசி செயலி
இச்செயலி மூலம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை தொடர்பான மானிய திட்டங்கள், பயனாளிகள் முன்பதிவு, உரம் மற்றும் விதை இருப்பு விபரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் பற்றிய விபரம், சந்தை விலை விபரம் மற்றும் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் வருகை விபரம் ஆகியவற்றை தெரிவித்துக்கொள்ளலாம். எனவே அனைத்து விவசாயிகளும் உடனடியாக இச்செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், வேளாண்மைத் துறை துணை இயக்குநர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
படம் உள்ளது
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

