நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 143 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம் வட்டம் புதிய நம்பியார் நகரைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரின் கல்வி செலவிற்காக ரூ.10,000 மற்றும் வேதாரண்யம் வட்டம் பிச்சங்கோட்டகம் மூலகரையைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு மருத்துவ செலவிற்காக ரூ.10,000 என மொத்தம் ரூ.20,000க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்தும், கீழ்வேளுர் வட்டம் வைரவன்காடு, திருப்பூண்டி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த லியாகத்அலி சவுதி அரேபிய நாட்டில் இறந்ததற்காக சவுதி அரேபியா நாட்டிலிருந்து தமிழக அரசிற்கு வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.2,84,909க்கான காசோலையை அவரது வாரிசிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
நாகப்பட்டினம் கோட்ட கலால் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய உதயகுமார் என்பவர் பணிக்காலத்தில் இறந்ததற்காக அவரது மகன் கிஷோர்குமார் என்பவருக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையினை வழங்கி, மேலும் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி திருமருகல் ஊராட்சி ஒன்றியம், சேஷமூலை கிராமத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி இராஜகணேசன் என்பவர் விண்ணப்பித்த மனுவினை ஆய்வு செய்து அவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு உரிய அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு
துணை ஆட்சியர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
குணசேகரன், அலுவலக மேலாளர் (பொது) ஸ்ரீதர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

