வேளாங்கண்ணியில் 228 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா –சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் சுமார் 10 கோடி மதிப்பீட்டில் 228 நபர்களுக்கு வீட்டு மனை பட்டாவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், நாகை எம்.பி செல்வராசு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களின் பிரச்சனைகளை தீர்த்து மக்களைத் தேடிஅனைத்தும் சேரவேண்டும் என்ற நோக்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து சாதாரண மக்களுக்கு தேவையான இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் குறித்து பயனாளிகளை தேர்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து, வேளாங்கண்ணி பூக்காரத்தெருவில் 64 பயனாளிகளுக்கு, செட்டிதெற்கு தெருவில் 164 பயனாளிகளுக்கும் மொத்தம் 228 பயனாளிகளுக்கு ரூ.9,84,98,160 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவைச் சேர்ந்த மேரி என்பவர் நம் முதல்வர் அவர்களிடம் அளித்த மனுவினை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாவையும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் வழங்கினார்.
மேலும், கொரோனா மூன்றாம் அலையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த பேராயுதமாகும். பொதுமக்கள் சமூக இடைவெளி, முககவசம், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்றவைகளை கடைபிடித்து நம்மைநாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், கீழ்வேளுர் வட்டாட்சியர் அமுதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

