தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் அதிரடி திருப்பம்
தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயரின் அதிரடி உத்தரவிற்கு கட்டுப்படுவாரா? தூத்துக்குடி பிஷப் தேவசகாயம்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது.
பேராயர் தேவசகாயம் முன்னிலையில் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையும், சுமூகமாக முடிந்தது. டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் அருட்திரு இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கினார்.
மறுநாள் 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, சமூக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒருவர் வாக்குச்சீட்டை மடித்து, தனது பையில் வைப்பது போன்ற கானொளி வெளிவந்தது. இதுகுறித்து திருமண்டல சபையார்கள் பலர் இந்த வீடியோ வெளிவந்தது எப்படி? யார் வெளியிட்டார்கள்? வெளியிட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கருத்து தெரிவித்ததோடு இப்படிப்பட்ட முக்கியமான ஆவணங்கள் பேராயரிடமோ, அல்லது பிரதம பேராயரிடமோ பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சிலமணி நேரத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய வீடியோ தனிநபர்களால் வைரலாக பரப்பப்பட்டு, கிறிஸ்துவத்தை இழிவு படுத்தியவர்களை சபையார்கள் கண்டித்ததையும் பார்க்க முடிந்தது.
இதன் பேரில், 22.10.2021 அன்று சினாட் பொதுச்செயலாளர் அட்வகேட் பெர்னான்ட்ஸ் ரத்தினராஜா, பேராயர் தேவசகாயத்திற்கு கடிதம் அனுப்பி தாங்கள் தென்னிந்திய திருச்சபை சட்டத்தை மீறி நடந்திருப்பது தவறு என்றும், தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட டி.எஸ்.எப் அணியினரோடு இணக்கமாக செல்ல அறிவுறுத்தினார். சினாட் பொதுச்செயலாளரின் கடிதத்தையும் மீறிய பேராயர் தேவசகாயம் புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகத்தை செயல்பட விடாமல் ஸ்தம்பிக்க வைத்ததோடு, தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். மீண்டும் 3.11.2021 அன்று தேர்தலை நடத்த இருப்பதாக அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
திருமண்டலத்தை மீட்டெடுக்க போராடி வரும் டி.எஸ்.எப் அணியினர், இங்கு நடைபெற்ற அனைத்து தகவல்களையும் பிரதம பேராயரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன்பேரில், முழுமையாக விசாரணை மேற்கொண்ட பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் 28.10.2021 அன்று விரிவான கடிதத்தை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயத்திற்கு அனுப்பியிருக்கிறார். அதில் பேராயரின் நடவடிக்கைகள் அனைத்தும், தென்னிந்திய திருச்சபை சட்டத்திற்கு புறம்பாணது எனவும், சட்டத்தை மீறி செயல்பட்டதோடு, நிர்வாக கமிட்டி என்ற ஒன்று இல்லாத நிலையில், அதை கூட்டி பேராயர் தீர்மானம் நிறைவேற்றியது என்பது தவறு என கூறி, 1ம் தேதி என்றும், பின்பு 3ம் தேதி என்றும் அறிவித்த மறுதேர்தலை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டு, திருமண்டல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, டி.எஸ்.எப் அணியினரோடு மோதல் போக்கை கடைபிடிக்காமல் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தி, இதையே கடைசி வாய்ப்பாக எடுத்துக்கொள்ளும்படி எச்சரித்து தவறும்பட்சத்தில் எவ்வித அறிவிப்பும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதம பேராயர் கடிதம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம்

பேராயர் தேவசகாயம்

லே செயலாளர் கிப்ட்சன்
இனி பேராயர் தேவசகாயம் சினாட் உத்தரவிற்கு கட்டுப்படுவாரா? அல்லது தனிநபர்களின் பிடியில் இருந்து தப்பாமல் அவர்களுக்கு ராஜவிசுவாசமாக நடந்து பதவியை துறப்பாரா? வெற்றி பெற்றதாக டி.எஸ்.எப் அணியினரை அறிவித்துவிட்டு, அவர்களுக்கு ஜெபம் செய்து ஆசி வழங்கிய பின்னர் பேராயருக்கு திடீரென ஏற்பட்டுள்ள மனமாற்றம் மற்றும் அதன் பின்னணி ஆகியவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் 28.10.2021 அன்று பிரதம பேராயர் விரிவான கடிதம் எழுதியுள்ள நிலையில், என்ன நடக்கப் போகிறது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் திருமண்டல மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
தென்னிந்திய திருச்சபையினர் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் விவகாரத்தை முழுமையாக உற்றுக் கவனித்து வரும் நிலையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயரின் செயல்பாடுகள் குறித்து சினாட் அலுவலகத்தில் இருந்து இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ள சம்பவம் கிறிஸ்துவ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

