தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுகளை நல சங்க தலைவர் சூசை மைக்கேல், செயலாளர் ஆனந்த், பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனு அளித்துள்ளனர். அதே போன்று நண்டு வலை தொழிலாளர் முன்னேற்ற கழகத் தலைவர் தனராஜ், செயலாளர் ராஜன், பொருளாளர் அலெக்ஸ் ஆகியோர் தலைமையில் அச்சங்கத்தை சார்ந்தவர்கள் இன்று மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது “தூத்துக்குடியில் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளது. எங்கள் மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை ஸ்டெர்லைட் மூலமாக பெற்று வந்தோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடி இருப்பதால் எங்களது தொழில் சார்ந்த உதவிகள் கிடைப்பதில்லை. இந்த ஆலை மீண்டும் திறந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய இருக்கிறார்கள் என்பதை நம்புகிறோம்.
எங்களது வாழ்வாதாரம் மேம்படவும், கல்வி கற்ற எங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதை கருத்தில் கொண்டும், எங்கள் சங்கத்தின் வாயிலாக இந்த ஆலையை திறக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மனுவை அளிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதே போன்று தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் உள்ளிட்ட சில கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.


