தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கடந்த 09.09.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சன்னதுபுதுக்குடி பகுதியில் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்த முருகேசபாண்டியன் மகன் சரவணகுமார் (40) என்பவரை காரில் கடத்தி கத்தியை காட்டி மிரட்டி 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12,00,000/- பணத்தை பறித்து சென்ற வழக்கில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து
கயத்தாறு காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் சங்கிலிபாண்டி (19), கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மாடசாமி (எ) கோபி (35), கயத்தாறு காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த மாடசாமி மகன் செல்வம் (39), கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் பொன்ராஜ் (33), கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த நாராயணன் மகன் பொன் கார்த்திக் (24) மற்றும் கடத்தல் நாடகத்திற்கு மூளையாக செயல்பட்ட மேற்படி சரவணக்குமாரின் கார் ஓட்டுநரான கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சேதுபதி (எ) சேது (24) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான சங்கிலிபாண்டி, மாடசாமி (எ) கோபி, செல்வம் மற்றும் சேதுபதி (எ) சேது ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து அறிக்கை அளித்தார்.
கடந்த 25.09.2021 அன்று எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எப்போதும்வென்றான் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தவரை வழிமறித்து தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (25) என்பவரை எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மேற்படி மாரிச்செல்வம் மீது எப்போதும்வென்றான், கோவில்பட்டி கிழக்கு மற்றும் தூத்துக்குடி மத்தியபாகம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 8 வழக்குகள் உள்ளது குறிப்படத்தக்கது. மேற்படி இவ்வழக்கின் எதிரியான மாரிச்செல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகம்மது அறிக்கை அளித்தார்.
கடந்த 24.09.2021 அன்று விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சரத்குமார் (24) என்பவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி சரத்குமார் என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி சரத்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா அறிக்கை அளித்தார்.
கடந்த 24.09.2021 அன்று தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியை சேர்ந்த ஜேசுராஜா மகன் டால்வின் (35) என்பவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி டால்வின் என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி டால்வின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா அறிக்கை அளித்தார்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் சங்கிலிபாண்டி, மாடசாமி (எ) கோபி, செல்வம், சேதுபதி (எ) சேது, மாரிச்செல்வம், சரத்குமார் மற்றும் டால்வின் ஆகிய 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள், 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

