இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி சிலர் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஹிந்து மதத்தில் இருப்பதாக சான்றிதழை வைத்து கொண்டு அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெறும் சிலர், கிறிஸ்தவம் உள்ளிட்ட வேறு மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சமீபகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
மேலும் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி சலுகைகளை அனுபவித்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத், ’’மஹாளய அமாவாசை தினத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கு ராமேஸ்வரத்தில் தடை விதித்து, அதே கடற்கரையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததை கண்டிக்கிறேன். ருத்ர தாண்டவம் படம் வெளியானதற்கு பின், கிரிப்டோ கிறிஸ்துவர்கள் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து தாழ்த்தப்பட்ட மக்களின் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., வெளிப்படையாக கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஹிந்து என சான்றிதழ் வைத்துள்ளார். இது ஒரு கிரிமினல் குற்றம். மிகப் பெரும் மோசடி. அரசு துறையிலும் ஹிந்து சான்று மூலம் ஊடுருவி உள்ள பிற மதத்தவர்களை நீக்க வேண்டும்’’ என்றார்.
————–

