சென்னை குடும்பநலத்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி குடும்பநலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயர் பிறப்பு வரிசையை குறைக்கும் நோக்கத்துடன் அக்டோபர் 4 முதல் டிசம்பர் 31 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சிறப்பு குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தாய்மார்கள் இரண்டு மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொண்டு உயர் பிறப்பு வரிசையில் இருந்து வருகின்றனர்.
எனவே இவர்கள் மீண்டும் தாய்மையடைய அநேக வாய்ப்புகள் உள்ளது. தாய்மை அடைந்த பின்னர் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்வதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாகும் சூழ்நிலை உள்ளது. பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்வதுடன் குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ள இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்பநல முகாம்கள் நடைபெற உள்ளது.
தகுதி வாய்ந்த தாய்மார்கள் அனைவரும் இந்த சிறப்பு குடும்பநல முகாம்களில் பங்கேற்று ஏதாவது ஒரு குடும்பநல முறையை ( நிரந்தர மற்றும் தற்காலிக ) ஏற்று தாய் சேய் மரணம் இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்குட்பட்ட கிராம சுகாதர செவிலியர்களையோ, மருத்துவ நிலையங்களையோ அணுகி தேவையான விவரங்களை தெரிந்துக் கொண்டு இந்த சிறப்பு குடும்பநல முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

