தூத்துக்குடியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து மனிதநேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்பி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
லட்சத்தீவு பகுதியை சேர்ந்த முகம்மது ரபீக் என்பவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் தோணி பழுது பார்க்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 20.09.2021 அன்று தூத்துக்குடி சின்னகோவில் பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு வைத்து தனது மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளார். அதில் ஆதார் கார்டு, பான்கார்டு ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் ரூ.6850 பணமும் வைத்திருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொன்னு மகன் ராமநாதன் (57) என்பவர் மேற்படி மணிப்பர்ஸ் கீழே கிடப்பதை பார்த்து அதை எடுத்து மனித நேயத்துடன் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் அறிவுரையின்படி உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அதில் உள்ள ஆவணங்களை வைத்து, அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதன் உரிமையாளரான முகம்மது ரபீக் என்பவரிடம் ஒப்படைத்தார்.
மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளவர் மறுபடியும் இந்த ஆவணங்களை சேகரிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மனித நேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேற்படி ராமநாதன் என்பவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ராமநாதன் அவர்களை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

