தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தென் காசியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் தென்காசிக்கு சென்றார்.
அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். ’’நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலமாக தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் அதிகமான ஏழை நடுத்தர மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயனடைந்திருக்கிறாரகள்.
தமிழகத்தில் கொலைக் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானது. அதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
வெவ்வேறு மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழப்பதை மறைக்கும் தமிழக அரசு, நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லி அரசியல் செய்கிறது. மாணவர்களின் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்றால், இவர்கள் அவர்களை குழப்பாமல் இருந்தாலே போது. தேர்தல் வரும் போதெல்லாம் திமுக நீட் தொடர்பாக பேசி அரசியல் ஆதாயம் தேடிக் கொள்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக் கூடிய அரசு ஏன் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை கூட கோவிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது?. டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கோவில்களுக்கு கொடுப்பதில்லை. வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஏழு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 850 மாணவர்கள் சேர்க்கைக்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளை தமிழக அரசு விரைந்து முடித்தால் அங்கும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும்.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு வழங்கிய உணவு தானியங்கள் வழங்கியது. கொரோனா தடுப்பூசி என மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களிலும் மாநில அரசு மத்திய அரசின் பெயரையோ பாரதப்பிரதமர் படத்தையோ வெளியிடாமல் மாநில அரசு செய்வதாக சொல்லிக்கொள்கிறது. இதன் மூலம் இந்த அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்’’ என்றார்.

