கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொடர்ந்து வழங்க கோரி மறியல்
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியின் குடிநீர் உவர் தன்மை கொண்டதாக உள்ளதால் அவர்கள் குடிநீருக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை நம்பியே உள்ளனர்.
கோடியக்கரை மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமான கொள்ளிடம் கூட்டு குடிநீர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருவதில்லை. இது சம்பந்தமாக பலமுறை ஆட்சியர் உட்பட்ட பல அதிகாரிகளிடம் முறையிட்டும் நிரந்தரமாக தடையின்றி குடிநீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் அவலநிலையை அலட்சியம் செய்யும் அதிகாரிகளை கண்டித்து கோடியக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே கொரானா கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியுடன் கூடிய மறியல் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் வட்டாட்சியர் போராட்டக்காரர்களிடம் பேசி இனி குடிநீர் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

