தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 200 இடங்களில் வாகன சோதனை – எஸ்பி தகவல்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (19.07.2020) ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று வரும் 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொள்ளும் ஊரடங்கு பாதுகாப்பு பணியினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது
தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 போலீசார் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மட்டும் 27 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது என்றும், பொதுமக்கள் இன்றைய முழு ஊரடங்கு நாளில் அத்தியாவசிய பணிக்கு செல்வோர் தவிர, வேறு யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவ்வாறு மீறி வெளி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், உதவி ஆய்வாளர்; காமராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
செய்தித்தொகுப்பு ஆத்திமுத்து

