பாரதியின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள இருக்கைக்கு பாரதி பெயரை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழா மற்றும். சுப்பிரமணிய பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல். முருகன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ. சிதம்பரம் பிள்ளை நூல்களை வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது : ஏழ்மையை தவிர ஒன்றையும் பார்க்காதவர் பாரதியார். பெண்களுக்காக அந்த காலத்திலேயே தனியாக பத்திரிகையை நடத்தியவர், அவருடைய சக்தி வைரம் மாதிரி பலம் கொண்டது. அவருடைய எழுத்துக்கள், வார்த்தைகள் அத்தனையும் சக்திவாய்ந்தது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே கிடைத்த சுதந்திரத்தை எப்படி ஆனந்தமாக கொண்டாட வேண்டும் என்பதை அவர் உற்சாகமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் பாடியுள்ளார். வெள்ளைக்காரனை கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அவர் அப்போதே சுதந்தரத்தை ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று சொல்லி வரவேற்று இருக்கிறார்.
சில சரித்திர உணர்ச்சிமிக்க பாடலை பாடியவர் பாடல்கள் மனதில் சில தடங்கல்கள் ஏற்படும் போது பராசக்தி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எரிமலை போன்றும் உணர்ச்சிமிகு எழுத்துக்களை அவர் கஷ்டப்பட்டு எழுதியுள்ளார். பாரதியாரின் கவிதைகள் உணர்ச்சிகளை புகழ்ந்து எடுத்துப்போட்டு கவிதை என குறிப்பிட்டார். அப்படி உணர்ச்சிமிக்க கவிதைகளைப் பாடிய அவருக்கு இந்த நாடு என்ன கொடுத்தது பாரதிக்காக கட்டப்பட்ட எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் இன்னும் அழகுபடுத்தப்பட வேண்டும். அவருடைய பெருமையை உலகறியச் செய்யும் வகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள இருக்கைக்கு பாரதி பெயரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரின் சிறப்பையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளுக்கு பாரதியாரின் பாட்டை கற்றுக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் சிறுவயதிலேயே சிறுவர்களிடம் நாட்டுப்பற்று வளரும். அவர் எட்டயபுரத்தின் சொத்து அவரை உலகிற்கு பகிர்ந்து கொடுங்கள். பாரதியை நீங்கள் மறக்காதீர்கள் நாங்களும் மறக்க மாட்டோம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில். சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் உள்ள எண்ணற்ற சுதந்திர போராட்ட தலைவர்கள் புகழை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு பணிகளை இந்த அரசு செய்து வருகிறது கடந்த மாதம் சிதம்பரனாரின் 150வது ஆண்டு பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு இதே பகுதியில் பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழக சுதந்திரத்திற்காக பாடுபட்ட அத்தனை தலைவர்களையும் உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும் பாரதி என்றால் எழுச்சி பாரதி ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார். இந்த நாட்டுக்கு பாரதி ஆற்றிய பங்கு அளப்பரியது என்று அமைச்சர் எல். முருகன் பேசினார்.
முன்னதாக எட்டையபுரத்திலுள்ள பாரதியாரின் பிறந்த இல்லத்தில் உள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தலைமையை தென்மண்டல தலைமை இயக்குனர் எஸ் வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடபட பலர் கலந்து கொண்டனர்
