நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திர செயல் விளக்கம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார்
செப் 8
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் வேளாண்மைப் பொறியியல்
துறையின் மூலம் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரத்தின் செயல் விளக்கத்தை;
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் டிராக்டர் (குதிரைத் திறன் 35க்கு
மேல்) மூலம் இயங்கக் கூடியது. ஒரு முறைக்கு 2 மெட்ரிக் டன் ஈரப்பதமுள்ள நெல்லை
(21சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம்) குறைந்த பட்சம் 2 மணி நேரத்தில் 15 சதவீதம் ஈரப்பதமுள்ளதாக காய வைக்க வல்லது. இது டீசல் மூலம் வெப்பத்தினை உருவாக்கும் பர்னர் கொண்டது.
அதிகபட்சமாக 20 அடி தூரம் வரையுள்ள நெல் குவியலிலிருந்து நெல்லை ஸ்கூரு
கன்வேயர் மூலம் தானாகவே உலர்த்தும் கலனிற்கு எடுத்துச் சென்று நிரப்பக் கூடியதாகும்.
நெல்லின் ஈரப்பதத்தினைக் கண்காணிக்க அதி நவீன தானியங்கி சென்சார்கள்
பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவையான ஈரப்பதம் கிடைக்கப் பெற்றவுடன் தூற்றும் இயந்திரத்தின் மூலம்
தூசி மற்றும் கருக்காய்களை சுத்தம் செய்து தேவையான அளவு கோணிப்பைகளில்
பிடிக்கக் கூடிய திறன்கொண்டது.
இச்செயல் விளக்கத்தின்போது வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர்
பழனிசாமி, தொழில் நுட்ப அலுவலர் பாலசுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர், செந்தில்குமார், மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவக்குமார், வேளாண் துறை துணை இயக்குநர் மதியரசன், திருமருகல் வேளாண்மை உதவி இயக்குநர் திரு. கவியரசன், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் திருமருகல் வட்டார விவசாயிகள், உள்ளுர் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
படம் உள்ளது.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

