இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதி விபத்து – மீனவர் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியதில் நாகை மீனவர் மருத்துவமனையில் அனுமதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர் தெருவைச் சேர்ந்த தவமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் தவமணி, சந்திரகுமார் , மகாலிங்கம் , செல்லமணி ஆகிய நால்வரும் நேற்று மாலை புஷ்பவனம் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு புஷ்பவனத்திற்கு கிழக்கே சுமார் 7 நாட்டிகல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இந்திய கடற்படை கப்பல் மீன்பிடி படகின் மீது மோதியதில் படகிலிருந்த மீனவர்களில் செல்லமணி என்பவர் மட்டும் கடலில் விழுந்து விட்டதாகவும், பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து அங்கு மற்றொரு படகில் வந்த மீனவர்கள் உதவியுடன் நீந்திக் கொண்டிருந்த செல்லமணியை கண்டுபிடித்து படகில் ஏற்றி இன்று காலை 06.30 மணிக்கு மீனவர்கள் அனைவரும் புஷ்பவனம் கரை திரும்பியுள்ளனர்.
கடலில் விழுந்த செல்லமணி களைப்படைந்து காணப்பட்டதால் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மணிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இந்திய கடற்படை கப்பல் மீன்பிடி படகில் மோதியதில் படகில் இருந்த மீனவர் மகாலிங்கத்திற்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது இதனால் மகாலிங்கம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
தற்போது செல்லமணி மற்றும் மகாலிங்கம் ஆகிய இருவரும் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

