தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக தினசரி சுமார் 12,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மபுதூர் ஆக்டிவ் மைன்ட்ஸ் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று (04.09.4021) துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் 3வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா தொற்று நோய் ஏற்பட்டாலும் பாதிப்பு குறைவாக இருப்பதோடு;, உயிரிழப்பினையும் தவிர்க்கலாம். எனவே கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதோடு பல்வேறு இடங்களில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். அனைவரும் கரோனா தடுப்பூசி; செலுத்திக்கொள்வதற்கு வசதியாக ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் சுகாதார துறையின் தடுப்பூசி முகாமிற்கு மக்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
நமது மாவட்டத்தில் சராசரியாக தினசரி சுமார் 12000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேற்றைய தினம் சுமார் 11335 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சுமார் 50000 டோஸ் தொடர்ந்து கையிருப்பில் உள்ளது. சுகாதார துறையின் மூலம் தினமும் 30000க்கும் அதிகமான தடுப்பூசி நமது மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். ஒரு நாளைக்கு 30000 முதல் 40000 நபர்களுக்கு தடுப்பூசி டோஸ் இருப்பு நம்மிடம் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒருவர் செலுத்திக்கொள்ளாமல் விட்டாலும் அனைவருக்கும் அது பாதிப்பினை ஏற்படுத்தும்.
கரோனா நோய் தொற்று சமூக அளவில் பரவுவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே முழு பயன் அடைய முடியும். தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முகாம் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கரோனா நோய் தடுப்பூசி தினசரி 40000 டோஸ் போடுவதுதான் நமது மாவட்டத்தின் இலக்கு என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், வட்டாட்சியர் ஐயப்பன், கோவில்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் உமாசெல்வி, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஆக்டிவ் மைன்ட்ஸ் மனநல காப்பகம் நிர்வாகி தேன்ராஜா, ஆக்டிவ் மைன்ட்ஸ் மனநல காப்பகம் பொருளாளர் முகேஷ்ஜெயந்த் மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

