சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் தூத்துக்குடியில் இருந்து மதுரை சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று மாலை வரையில் அவர்கள் பேரூரணி சிறையில் இருந்தனர்.இந்நிலையில் அவர்கள் 5 பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் ரூரல் டிஎஸ்பி பொன்னரசு, முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரது தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 5 பேரும் அழைத்து செல்லப்பட்டனர்.
இரவில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருவதாலும், மதுரை சிபிசிஐடி கோர்ட்டில் கொலை வழக்கு விசாரணை நடக்க இருப்பதாலும், அதற்கு வசதியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இதனிடையே இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேரையும் காவலில் எடுக்க நாளை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்தது தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது
செய்தி தொகுப்பு
ஆத்திமுத்து
