செஞ்சி மோட்டூர் கிராமத்தில் பெற்ற குழந்தை மீது கொடூர தாக்குதலை நடத்திய தாய் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தில் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், இந்த கொடூர தாக்குதலின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் அடுத்த மணலப்பாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம் பள்ளியை சேர்ந்த துளசி என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வடிவழகன் மற்றும் அவரது மனைவி துளசிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள துளசி வீட்டில் அவரை விட்டு விட்டு வந்துள்ளார் கணவர் வடிவழகன். பின்னர்தான் தனது வீட்டில் இருந்த மனைவி செல்போனை எடுத்து வீடியோ, போட்டோக்களை பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த மாதம் 23ஆம் தேதி துளசி தனது இளைய மகன் பிரதீப்பை மிக கொடூரமாக அடித்து துன்புறுத்தும் வீடியோ அவரது செல்போனில் இருந்தது. அப்படியே உறைந்து போனார் வடிவழகன். இந்த நிலையில் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார் வடிவழகன். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவ ஆரம்பித்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் துளசி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சத்தியமங்கலம் ஆய்வாளர் தங்க குருநாதன் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் விரைந்து துளசியை கைது செய்தனர்.
விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இன்று காலை அழைத்து வந்து துளசியிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மீதுள்ள வெறுப்பை குழந்தை மீது காண்பித்து குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக துளசி தெரிவித்துள்ளார்.
துளசி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமாரை பிடிக்க உதவி ஆய்வாளர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். கள்ளக்காதலன் மீது காதல் பெருகியதால், தனது கணவர் மீது துளசிக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது. அதை தனது குழந்தை மீது காட்டுமிராண்டித்தனமாக அடித்து தணித்துள்ளார் இந்த பெண்மணி.
இதனிடையே, குழந்தைகள் வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என்று குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குழந்தையை தாக்கும் வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை பரப்பாதீர்கள் என அவர்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். மாவட்ட மற்றும் மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. எனவே ஏதாவது பிரச்சினை என்றால், அங்கு முறையிடலாம் அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்கிறார்கள் குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள்

