காஙகேயம் அருகே அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேயம் அருகே அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக காங்கேயத்தில் பிரமாண்டமான திருமண மண்டபமும் உள்ளது. இவரது மகன் சிவபிரதீப்,22, அரிசி ஆலை நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் சிவபிரதீப்பும் மற்றும் அவரது கார் டிரைவரும் ஒரு காரில் காங்கேயம் அருகே பாப்பினி-வீரசோழபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே டாடா சுமோ காரில் வந்த ஏழு நபர்கள் கொண்ட குழுவினர் சிவபிரதீப்பின் காரை நிறுத்தியுள்ளனர். அந்த ஏழு பேரில் டிரைவர் மட்டும் காக்கி உடையில் இருந்துள்ளார்.
தாங்கள் ராம்நாடு போலீசார் என்று கூறி, தாங்கள் ஓட்டிவந்த டாட்டா சுமோ காரில் சிவபிரதீப்பையும், அவரது ஓட்டுநரையும் ஏற்றிக் கொண்டு, பிரதீப் சென்ற இனோவா காரையும் உடன் கொண்டு சென்றுள்ளனர். திண்டுக்கல் சிறுமலை பகுதிக்கு கடத்திச் சென்று, சிவ பிரதீப்பின் டிரைவர் சதாம் என்பவரின் செல்போனை வாங்கி, சிவ பிரதீப்பின் தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்து பணம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்காமல் போனாலோ, போலீசுக்குப் போனாலோ சிவபிரதீப்பை கொன்று விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவருடைய மாமா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் அங்கு சென்று கடத்தல்காரர்கள் கேட்ட பணம் ரூ.3 கோடி பணத்தை மூன்று அரிசிப் பைகளில் கொடுத்து மகன் சிவபிரதீப், ஓட்டுநர் சதாம் மற்றும் இன்னோவா கார் ஆகியனவற்றை மீட்டுக் கொண்டு, திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் செய்தனர். மேலும் காரில் சென்று கொண்டிருந்தபோது, கடத்தல்காரர்கள் பேசியதை வைத்து, கடத்திய நபர்களின் பெயரையும் சிவபிரதீப் போலீசில் சொல்லியுள்ளார். இதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடிவந்தனர்.

இதில் கடத்தல் நடந்தபோது டிரைவரின் செல்போல் எண்ணிலிருந்து தொழிலதிபருக்கு அழைத்த கும்பல், பின்னால் ஸ்கார்பியோ காரில் வந்து கொண்டிருந்த அவரது கூட்டாளிகளுக்கு இரு முறை அழைத்துப் பேசியுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னலை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து செல்போன் சிக்னலை வைத்து மதுரை அருகே பதுங்கியிருந்த கும்பலை பிடிக்க சென்ற போலீசார், மதுரை புறநகர் பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த திண்டிவனம்,குலமங்கலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரின் மகன் சக்திவேல்(37), மதுரையை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவரின் மகன் அகஸ்டின்(45), ஆந்திரா மாநிலம், நெல்லூர், எ.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த எஸ்திராஜ் என்பாரின் மகன் பாலாஜி(38) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மீதமுள்ள சென்னையை சேர்ந்த சையது, மதுரையை சேர்ந்த பாலன், நத்தம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் ஆகிய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1 கோடியே 65 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர். அரிசி ஆலை அதிபரின் மகனை கடத்தலில் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த நபர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என ரகசியமாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருப்பூர் மாவட்ட தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



